68 – அல் கலம்
அத்தியாயம்: 68 அல் கலம் – எழுதுகோல், மொத்த வசனங்கள்: 52
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் எழுதுகோல் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு எழுதுகோல் என பெயரிடப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. நூன். எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக.
2. (முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை.
3. உமக்கு முடிவுறாத கூலி உண்டு.
4. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.
5, 6. உங்களில் யாருக்குப் பைத்தியம் என்று நீரும் பார்ப்பீர்! அவர்களும் பார்ப்பார்கள்.
7. உமது இறைவன் தனது பாதையை விட்டும் வழிதவறியவர் யார் என்பதை நன்கு அறிந்தவன். நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கு அறிந்தவன்.
8. பொய்யெனக் கருதுவோருக்குக் கட்டுப்படாதீர்!
9. (முஹம்மதே!) நீர் வளைந்து கொடுத்தால் அவர்களும் வளைந்து கொடுக்க விரும்புகின்றனர்.
10. அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்!
11. அவன் குறை கூறுபவன்; கோள் சொல்லித் திரிபவன்.
12. நன்மையைத் தடுப்பவன்; வரம்பு மீறுபவன்; குற்றம் புரிபவன்.
13. முரடன். இதற்கு மேல் தவறான வழியில் பிறந்தவன்.
14. செல்வமும், ஆண்மக்களும் உடையவனாக அவன் இருக்கிறான் என்பதால் (அவனுக்குக் கட்டுப்படாதீர்.)
15. அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் “முன்னோர்களின் கட்டுக் கதைகள்” எனக் கூறுகிறான்.
16. அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்.
17. அந்தத் தோட்டத்துக்குரியோரை சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம். “காலையில் அதை அறுவடை செய்வோம்” என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர்.
18. இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை.
19. எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிடமிருந்து சுற்றி வளைக்கக் கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது.
20. அது காரிருள் போல் ஆனது.
21, 22, 23, 24. “நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று உங்களிடம் எந்த ஏழையும் நுழைந்து விட வேண்டாம்” என்று அவர்கள் குறைந்த சப்தத்தில் பேசிக் கொண்டே காலையில் ஒருவரையொருவர் அழைக்கலானார்கள்.
25. தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் காலைப் பொழுதை அடைந்தனர்.
26. அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தைக் கண்ட போது, “நாம் வழிமாறி (வேறு இடம்) வந்து விட்டோம்” என்று கூறினர்.
27. “இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம்” (என்றனர்.)
28. அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர் “நீங்கள் இறைவனைத் துதித்திருக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?” என்று கேட்டார்.
29. “எங்கள் இறைவன் தூயவன். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்” என்றனர்.
30. அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள்.
31. “எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே! நாங்கள் வரம்பு மீறி விட்டோமே!” என்றனர்.
32. “இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக்கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்” (என்றும் கூறினர்.)
33. இப்படித் தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?
34. (இறைவனை) அஞ்சியோருக்கு அவர்களின் இறைவனிடம் இன்பமான சொர்க்கச் சோலைகள் உண்டு.
35. கட்டுப்பட்டு நடப்பவர்களைக் குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
36. உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?
37, 38. தேர்வு செய்யும் உரிமை உங்களுக்கு உண்டு என்று கூறுகின்ற, நீங்கள் வாசிக்கும் வேதம் உங்களுக்கு இருக்கிறதா?
39. நீங்கள் முடிவு செய்வது உங்களுக்கு உண்டு என நம்மிடம் செய்து கொண்ட, கியாமத் நாள் வரை செல்லத் தக்க, உடன்படிக்கைகள் உங்களிடம் உள்ளனவா?
40. அவர்களில் யார் இதற்குப் பொறுப்பு என்று அவர்களைக் கேட்பீராக!
41. அல்லது அவர்களுக்குத் தெய்வங்கள் உள்ளனரா? அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தமது தெய்வங்களைக் கொண்டு வரட்டும்!
42. கெண்டைக்கால் திறக்கப்பட்டு ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.
43. அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து விடும். அவர்கள் உடலில் குறை ஏதுமற்று இருந்த நிலையில் (உலகில்) ஸஜ்தாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
44. என்னையும், இச்செய்தியைப் பொய்யெனக் கருதுபவனையும் விட்டு விடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் அவர்களை விட்டுப் பிடிப்போம்.
45. அவர்களுக்கு அவகாசம் அளிப்பேன். எனது சூழ்ச்சி உறுதியானது.
46. (முஹம்மதே!) நீர் அவர்களிடம் கூலி கேட்டு அதனால் அவர்கள் கடன் சுமையைச் சுமக்கப் போகிறார்களா?
47. அல்லது அவர்களிடம் மறைவானவை (பற்றிய அறிவு) இருந்து அவர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்களா?
48. உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர்(யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார்.
49. அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார்.
50. ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.
51. (முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். “இவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர்.
52. இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.