58 – அல் முஜாதலா

அத்தியாயம்: 58 அல் முஜாதலா – தர்க்கம் செய்தல், மொத்த வசனங்கள்: 22

இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நபிகள் நாயகத்திடம் ஒரு பெண் தர்க்கம் செய்தது பற்றி கூறப்படுவதால் தர்க்கம் செய்தல் என்று பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.

2. உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. வெறுக்கத்தக்க சொல்லையும், பொய்யையும் அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன்.

3. தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக் கூறி விட்டு தாம் கூறியதைத் திரும்பப் பெறுகிறவர், ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதுவே உங்களுக்குக் கூறப்படும் அறிவுரை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

4. (அடிமை) கிடைக்காதவர் ஒருவரை யொருவர் தீண்டுவதற்கு முன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். யாருக்குச் சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நீங்கள் நம்புவதற்கு ஏற்றது. இவை அல்லாஹ்வின் வரம்புகள். (அவனை) மறுப்பவருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

5. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்வோர் இவர்களுக்கு முன் சென்றோர் இழிவுபடுத்தப்பட்டது போல் இழிவுபடுத்தப்படுவார்கள். தெளிவான சான்றுகளை அருளியுள்ளோம். (நம்மை) மறுப்போருக்கு இழிவு தரும் வேதனை இருக்கிறது.

6. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் உயிர்ப்பிக்கும் நாளில் அவர்கள் செய்ததை அப்போது அவர்களுக்கு அறிவிப்பான். அதை அல்லாஹ் கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்கள் அதை மறந்து விட்டனர். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.

7. வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? மூவரின் இரகசியத்தில் அவன் நான்காமவனாக இல்லாமல் இல்லை. ஐவரில் அவன் ஆறாமவனாக இல்லாமல் இல்லை. இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் அவன் இல்லாமல் இருப்பதில்லை.பின்னர் கியாமத் நாளில் அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

8. இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா? பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார் களோ அதை மீண்டும் செய்கின்றனர். பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர். (முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் வரும் போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம்.

9. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இரகசியம் பேசினால் பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவை குறித்து இரகசியம் பேசாதீர்கள்! நன்மை மற்றும் இறையச்சத்தை இரகசியமாகப் பேசுங்கள். யாரிடம் ஒன்று திரட்டப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!

10. இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவது. அல்லாஹ்வின் விருப்பமின்றி அவர்களுக்குச் சிறிதளவும் அவனால் தீங்கு இழைக்க முடியாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

11. “நம்பிக்கை கொண்டோரே! சபைகளில் (பிறருக்கு) இடமளியுங்கள்!” என்று உங்களிடம் கூறப்பட்டால் இடமளியுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு இடமளிப்பான். “எழுந்து விடுங்கள்!” எனக் கூறப்பட்டால் எழுந்து விடுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

12. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இத்தூதரிடம் (முஹம்மதிடம்) இரகசியமாகப் பேசினால் உங்கள் இரகசியத்துக்கு முன் தர்மத்தை முற்படுத்துங்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. தூய்மையானது. உங்களுக்கு (எதுவும்) கிடைக்காவிட்டால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

13. உங்கள் இரகசியமான பேச்சுக்களுக்கு முன் தர்மங்களை முற்படுத்துவதற்கு அஞ்சுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் செய்யாத போது அல்லாஹ் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்றான். எனவே தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தும் கொடுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

14. அல்லாஹ் யார் மீது கோபம் கொண்டுள்ளானோ அந்தச் சமுதாயத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் உங்களைச் சேர்ந்தோரும் அல்லர். அவர்களைச் சேர்ந்தோரும் அல்லர். அறிந்து கொண்டே பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.

15. துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக்குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது.

16. அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கிக் கொண்டனர்.அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தார்கள். இழிவு தரும் வேதனை அவர்களுக்கு உண்டு.

17. அவர்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் அவர்களைக் காப்பாற்றாது. அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

18. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் உயிர்ப்பிக்கும் நாளில் உங்களிடம் சத்தியம் செய்தது போல் அவனிடமும் சத்தியம் செய்வார்கள். தாங்கள் ஒரு கொள்கையில் இருப்பதாக நினைக்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே பொய்யர்கள்.

19. ஷைத்தான் அவர்களை மிகைத்து விட்டான். அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கச் செய்தான். அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! ஷைத்தானின் கூட்டத்தினரே இழப்பை அடைந்தவர்கள்.

20. அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் பகைப்போரே இழிந்தோர்.

21. “நானும் எனது தூதர்களுமே மிகைப்போம்” என்று அல்லாஹ் விதித்து விட்டான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்.

22. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: