53 – அந்நஜ்மு

அத்தியாயம்: 53 அந்நஜ்மு – நட்சத்திரம், மொத்த வசனங்கள்: 62

இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நஜ்மு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயர் ஆனது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை!

2. உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை.

3. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.

4. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

5, 6, 7. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார்.

8. பின்னர் இறங்கி நெருங்கினார்.

9. அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு, அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது.

10. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான்.

11. அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை.

12. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?

13, 14. ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.

15. அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது.

16, 17. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை.

18. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார்.

19, 20. லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் சிந்தித்தீர்களா?

21. உங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா?

22. அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான்.

23. அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையரும் தாம் அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த அத்தாட்சியையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை. அவர்களுக்கு அவர்களின் இறைவனிட மிருந்து நேர் வழி வந்து விட்டது.

24. விரும்பியது (யாவும்) மனிதனுக்கு இருக்கிறதா?

25. அல்லாஹ்வுக்கே மறுமையும், இம்மையும் உரியது.

26. வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது.

27. மறுமையை நம்பாதோர் வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டுகின்றனர்.

28. அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. ஊகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. ஊகம் உண்மைக்கு எதிராக ஒரு பயனும் தராது.

29. இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (வேறு எதையும்) நாடாமல் நமது அறிவுரையைப் புறக்கணிப்பவரைப் அலட்சியம் செய்வீராக!

30. இதுவே அவர்களது அறிவின் எல்லை. தனது வழியை விட்டும் தவறியவன் யார்? நேர் வழி பெற்றவன் யார்? என்பதை உமது இறைவன் நன்கறிவான்.

31. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தீமை செய்தோரை அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாகத் தண்டிப்பான். நன்மை செய்து கொண்டிருப்போருக்கு அழகிய கூலியைக் கொடுப்பான்.

32. அற்பமானவை தவிர பெரும்பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் யார் தவிர்த்துக் கொள்கிறாரோ உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன். உங்களைப் பூமியிலிருந்து படைத்த போதும், உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்த போதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.

33. புறக்கணிப்பவனைப் பார்த்தீரா?

34. அவன் குறைவாகவே கொடுத்தான். (பிறர்) கொடுப்பதைத் தடுக்கிறான்.

35. அவனிடம் மறைவானவை பற்றிய ஞானம் இருந்து அவன் (அதைக்) காண்கிறானா?

36, 37, 38, 39. மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் “ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

40. அவனது உழைப்பு பின்னர் (மறுமையில்) காட்டப்படும்.

41. பின்னர் முழுமையான கூலி கொடுக்கப்படுவான்.

42. உமது இறைவனிடமே சென்றடைதல் உண்டு.

43. அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான்.

44. அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான்.

45, 46. செலுத்தப்படும் விந்துத் துளியிலிருந்து அவனே ஆண் பெண் எனும் ஜோடிகளைப் படைத்தான்.

47. மீண்டும் உருவாக்குவது அவனைச் சேர்ந்தது.

48. அவனே செல்வந்தனாக்கி திருப்தியடையச் செய்கிறான்.

49. அவனே “ஷிஃரா’வின் இறைவனாவான்.

50, 51, 52. அவனே முந்தைய ஆது, மற்றும் ஸமூது சமுதாயத்தையும், முன்னர் நூஹுடைய சமுதாயத்தையும் விட்டு வைக்காது அழித்தான். அவர்கள் மிகப் பெரும் அநீதி இழைத்து, வரம்பு மீறியோராக இருந்தனர்.

53. (லூத்துடைய சமுதாயமான) தலை கீழாகப் புரட்டப்பட்ட ஊராரையும் ஒழித்தான்.

54. அதைச் சுற்றி வளைக்க வேண்டியது வளைத்துக் கொண்டது.

55. உனது இறைவனின் அருட்கொடைகளில் எவற்றில் சந்தேகம் கொள்கிறாய்?

56. இது முந்தைய எச்சரிக்கைகளில் ஓர் எச்சரிக்கை!

57. நெருங்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது!

58. அல்லாஹ்வையன்றி அதை வெளிப்படுத்துபவர் எவருமில்லை.

59. இந்தச் செய்தியிலா ஆச்சரியப்படுகிறீர்கள்?

60. அழாமல் சிரிக்கிறீர்கள்?

61. அலட்சியம் செய்வோராகவும் இருக்கிறீர்கள்?

62. அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்து வணங்குங்கள்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: