52 – அத்தூர்

அத்தியாயம்: 52 அத்தூர் – ஒரு மலையின் பெயர், மொத்த வசனங்கள்: 49

இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், தூர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயராக ஆனது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. தூர்(மலை) மீது சத்தியமாக!

2, 3. விரித்து வைக்கப்பட்ட ஏட்டில் எழுதப்பட்ட புத்தகத்தின் மீது சத்தியமாக!

4. “பைத்துல் மஃமூர்’ மீது சத்தியமாக!

5. உயர்த்தப்பட்ட முகட்டின் மேல் சத்தியமாக!

6. (யுக முடிவு நாளில்) தீ மூட்டப்படும் கடலின் மீது சத்தியமாக!

7. உமது இறைவனின் தண்டனை நிகழக் கூடியது.

8. அதைத் தடுப்பவன் எவனுமில்லை.

9. அந்நாளில் வானம் சுற்றிச் சுழலும்.

10. மலைகள் ஒரேயடியாக இடம் பெயரும்.

11. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

12. அவர்கள் வீணானவற்றில் (மூழ்கி) விளையாடிக் கொண்டிருந்தனர்.

13. அந்நாளில் அவர்கள் நரகில் ஒரேயடியாகத் தள்ளப்படுவார்கள்.

14. நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே.

15. இது சூனியமா? அல்லது (இந்த நரகத்தை) நீங்கள் பார்க்க மாட்டீர்களா?

16. “இதில் கருகுங்கள்! (இதைச்) சகித்துக் கொள்ளுங்கள்! அல்லது சகிக்க முடியாமல் இருங்கள்! (இரண்டும்) உங்களுக்குச் சமமே. நீங்கள் செய்து கொண்டிருந்ததற்கே கூலி கொடுக்கப்படுகின்றீர்கள்” (எனக் கூறப்படும்).

17, 18, 19, 20. (இறைவனை) அஞ்சியோர் தமது இறைவன் தங்களுக்கு வழங்கியதை அனுபவித்துக் கொண்டு சொர்க்கச் சோலைகளிலும், இன்பத்திலும் இருப்பார்கள். அவர்களின் இறைவன் நரகின் வேதனையை விட்டு அவர்களைக் காப்பாற்றினான். நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களில் சாய்ந்து கொண்டு மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்.) “ஹூருல் ஈன்’களை அவர்களுக்குத் துணைவியராக்குவோம்.

21. யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன்.

22. அவர்களுக்குக் கனியையும், அவர்கள் விரும்பும் இறைச்சியையும் அளிப்போம்.

23. அங்கே ஒருவருக்கொருவர் குவளைகளை மகிழ்ச்சியால் பறித்துக் கொள்வார்கள். அதில் வீணானதும் குற்றம் பிடிப்பதும் இருக்காது.

24. அவர்களுக்குரிய ஊழியர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்கள் மூடி வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.

25, 26, 27, 28. “இதற்கு முன் நமது குடும்பத்தினர் பற்றி நாம் அஞ்சிக் கொண்டிருந்தோம். அல்லாஹ் நமக்கு அருள் புரிந்து நெருப்பின் வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றினான். முன்னர் அவனையே நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். அவன் பேருதவி புரிபவன். நிகரற்ற அன்புடையோன்” என்று அவர்களில் ஒருவர் மற்றவரை எதிர் கொண்டு விசாரித்துக் கொள்வார்கள்.

29. எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.

30. (இவர் ஒரு) கவிஞர். இவரது அழிவை எதிர்பார்க்கிறோம்” என்று கூறுகிறார்களா?

31. எதிர் பாருங்கள்! உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்க்கிறேன்” எனக் கூறுவீராக!

32. அவர்களது கற்பனைகள் தான் இவ்வாறு அவர்களுக்குக் கட்டளையிடுகிறதா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய கூட்டமா?

33. “இவர் இதனை இட்டுக் கட்டிவிட்டார்” எனக் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

34. அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.

35. எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது அவர்களே படைக்கக் கூடியவர்களா?

36. அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள்.

37. அல்லது உமது இறைவனின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா? அல்லது அவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்களா?

38. அல்லது அவர்களுக்கு ஒரு ஏணி இருக்கிறதா? அதில் ஏறி (வானுலகச் செய்திகளை) செவியுறுகிறார்களா? அப்படிச் செவியுறுபவர் தெளிவான சான்றைக் கொண்டு வரட்டும்.

39. அவனுக்குப் பெண் குழந்தைகளும், உங்களுக்கு ஆண் குழந்தைகளுமா?

40. அல்லது அவர்களிடம் நீர் கூலி எதையும் கேட்கிறீரா? அதனால் அவர்கள் கடன் சுமையைச் சுமப்பவர்களா?

41. அல்லது மறைவானவை அவர்களுக்குத் தெரிந்து (அதை) அவர்கள் எழுதிக் கொள்கிறார்களா?

42. அல்லது சூழ்ச்சி செய்ய எண்ணுகிறார்களா? (ஏக இறைவனை) மறுப்போர் தான் சூழ்ச்சிக்குள்ளாக்கப்படுவார்கள்.

43. அல்லது அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு வேறு கடவுள் உண்டா? அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

44. வானிலிருந்து ஒரு பகுதி விழுவதை அவர்கள் கண்டால் “அது அடர்ந்த மேகம்” என்று கூறுவார்கள்.

45. அவர்கள் அழிக்கப்படும் நாளைச் சந்திக்கும் வரை அவர்களை விட்டு விடுவீராக!

46. அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி சிறிதளவும் அவர்களைக் காப்பாற்றாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

47. அநீதி இழைத்தோருக்கு இது அல்லாத வேதனையும் உண்டு. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

48. (முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருப்பீராக! நீர் நமது கண்காணிப்பில் இருக்கிறீர். நீர் எழும் நேரத்தில் உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக!

49. இரவின் ஒரு பகுதியிலும், நட்சத்திரங்கள் மறையும் காலை நேரத்திலும் அவனைத் துதிப்பீராக!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: