47 – முஹம்மத்

அத்தியாயம்: 47 முஹம்மத் – இறுதித் தூதரின் பெயர், மொத்த வசனங்கள்: 38

இந்த அத்தியாயத்தின் 2வது வசனத்தில் முஹம்மது மீது அருளப்பட்டது என்ற சொல் இடம்பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்திற்கு முஹம்மத் என்று பெயரிடப்பட்டது

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. (ஏக இறைவனை) மறுத்து அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்போரின் செயல்களை (இறைவன்) வீணானதாக்கி விட்டான்.

2. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து, முஹம்மதுக்கு அருளப்பட்டது தமது இறைவனிடமிருந்து (வந்த) உண்மை என நம்புவோருக்கு அவர்களது தீமைகளை அவர்களை விட்டும் அவன் நீக்குகிறான். அவர்களின் நிலையைச் சீராக்குகிறான்.

3. (ஏக இறைவனை) மறுப்போர் பொய்யைப் பின்பற்றினார்கள் என்பதும், நம்பிக்கை கொண்டோர் தமது இறைவனிடமிருந்து வந்த உண்மையைப் பின்பற்றினார்கள் என்பதும் இதற்குக் காரணம். இவ்வாறே மனிதர்களுக்கு அவர்களுக்குரிய உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான்.

4. (ஏக இறைவனை) மறுப்போரை (போர்க்களத்தில்) சந்தித்தால் பிடரியை வெட்டுங்கள்! முடிவில் அவர்களை வென்றால் போர் (செய்பவர்) தனது ஆயுதங்களைக் கீழே போடும் வரை கட்டுகளைப் பலப்படுத்துங்கள்! அதன் பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்! அல்லது பெருந்தன்மையாக விட்டுவிடலாம். இதுவே (இறை கட்டளை). அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை (அவனே) தண்டித்திருப்பான். மாறாக உங்களில் ஒருவர் மூலம் மற்றவரை அவன் சோதிக்கிறான். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரின் செயல்களை அவன் வீணாக்கவே மாட்டான்.

5. அவர்களுக்கு அவன் நேர்வழி காட்டி, அவர்களது நிலையைச் சீராக்குவான்.

6. அவர்களுக்காக அவன் அறிவித்திருந்த சொர்க்கத்தில் அவர்களை நுழையச் செய்வான்.

7. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

8. (ஏக இறைவனை) மறுப்போருக்குக் கேடு தான். அவர்களது செயல்களை அவன் அழித்து வீணானதாக்கி விட்டான்.

9. அல்லாஹ் அருளியதை அவர்கள் வெறுத்துக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது செயல்களை அவன் அழித்து விட்டான்.

10. பூமியில் அவர்கள் பயணித்து தங்களுக்கு முன்சென்றோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனிக்கவில்லையா? அவர்களை அல்லாஹ் அடியோடு அழித்து விட்டான். (அவனை) மறுப்போருக்கு அது போன்றவை தான் உண்டு.

11. நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் பொறுப்பாளனாக இருப்பதும், (ஏக இறைவனை) மறுப்போருக்கு எந்தப் பொறுப்பாளனும் இல்லாதிருப்பதுமே இதற்குக் காரணம்.

12. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். (ஏக இறைவனை) மறுப்போர் (இவ்வுலகில்) கால்நடைகள் தின்பது போல் தின்று அனுபவிக்கிறார்கள். நரகமே அவர்களுக்குத் தங்குமிடம்.

13. (முஹம்மதே!) உம்மை வெளியேற்றிய உமது ஊரை விட மிகவும் வலிமைமிக்க எத்தனையோ ஊர்களை அழித்து விட்டோம். அவர்களுக்கு எந்த உதவியாளனும் இருக்கவில்லை.

14. தமது இறைவனிடமிருந்து (கிடைத்த) தெளிவான மார்க்கத்தில் இருப்பவர், தனது மனோ இச்சைகளைப் பின்பற்றி தனது தீய செயல் அழகானதாகக் காட்டப்பட்டவனைப் போன்றவரா?

15. (இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அதில் மாற்றமடையாத தண்ணீரைக் கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் போகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும் இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடமிருந்து மன்னிப்பும் உண்டு. (இவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா?

16. (முஹம்மதே!) உம்மிடமிருந்து செவியேற்பவரும் அவர்களில் உள்ளனர். உம்மை விட்டு அவர்கள் வெளியேறியவுடன் “இவர் சற்று முன் என்ன தான் கூறினார்?” என்று கல்வி வழங்கப்பட்டோரிடம் (கேலியாக) கேட்கின்றனர். அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்கள் தமது மனோஇச்சைகளைப் பின்பற்றினார்கள்.

17. நேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான்.

18. அந்த நேரம் திடீரென தங்களிடம் வருவதைத் தவிர வேறெதனையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அதன் அடையாளங்கள் வந்து விட்டன. அது அவர்களிடம் வரும் போது அவர்கள் படிப்பினை பெறுவது எப்படி?

19. “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை” என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான்.

20, 21. (இன்னும்) ஓர் அத்தியாயம் அருளப்படக் கூடாதா? என்று நம்பிக்கை கொண்டோர் கேட்கின்றனர். உறுதியான கருத்தைக் கூறும் அத்தியாயம் அருளப்பட்டு அதில் போர் குறித்தும் கூறப்பட்டால் யாருடைய உள்ளங்களில் நோய் உள்ளதோ அவர்கள் மரணத்தால் மூர்ச்சையடைந்தவர் வெறிப்பது போல் உம்மைப் பார்ப்பதை (முஹம்மதே!) நீர் காண்பீர். எனவே கட்டுப்படுதலும், அழகிய சொல்லைக் கூறுவதும் அவர்களுக்குத் தகுந்தது. காரியம் (போர்) உறுதியாகி விடும் போது அவர்கள் அல்லாஹ்விடம் உண்மையாக நடந்து கொண்டால் அது அவர்களுக்குச் சிறந்தது.

22. நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?

23. அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான்.

24. அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

25. நேர்வழி தங்களுக்குத் தெளிவான பின் புறங்காட்டி திரும்பிச் சென்றவர்களுக்கு ஷைத்தான் அதை அழகாக்கிக் காட்டினான். அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறினான்.

26. அல்லாஹ் அருளியதை யார் வெறுத்தார்களோ அவர்களிடம் “சில விஷயங்களில் உங்களுக்குக் கட்டுப்படுவோம்” என்று இவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அவர்களின் இரகசியங்களை அல்லாஹ் அறிவான்.

27. அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்?

28. அல்லாஹ்வுக்குக் கோபத்தை ஏற்படுத்தக் கூடியதை அவர்கள் பின்பற்றியதும், அவனது திருப்தியை வெறுத்ததுமே இதற்குக் காரணம். எனவே அவர்களின் செயல்களை அவன் அழித்து விட்டான்.

29. யாருடைய உள்ளங்களில் நோய் உள்ளதோ அவர்கள் தமது கபடங்களை அல்லாஹ் வெளிப்படுத்தவே மாட்டான் என்று நினைத்து விட்டார்களா?

30. (முஹம்மதே!) நாம் நினைத்திருந்தால் அவர்களை உமக்குக் காட்டியிருப்போம். அவர்களது அடையாளத்தைக் கொண்டு அவர்களை அறிந்து கொள்வீர்! அவர்கள் பேசும் விதத்திலும் அவர்களை அறிந்து கொள்வீர்! அல்லாஹ் உங்கள் செயல்களை அறிவான்.

31. உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.

32. (ஏக இறைவனை) மறுத்து, அல்லாஹ்வின் வழியை விட்டும் தடுத்து, நேர்வழி தமக்குத் தெளிவான பின்னர் இத்தூதருக்கு எதிராகவும் நடப்போர் அல்லாஹ்வுக்குச் சிறிதளவும் தீங்கிழைக்க முடியாது. அவர்களின் செயல்களை அவன் அழித்து விடுவான்.

33. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

34. (ஏக இறைவனை) மறுத்து அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துப் பின்னர் மறுப்போராகவே மரணித்து விட்டவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

35. (போர்க்களத்தில்) தைரியமிழந்து சமாதானத்துக்கு அழைப்பு விடாதீர்கள்! நீங்களே உயர்ந்தவர்கள். அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான். உங்கள் செயல்களை உங்களுக்கு அவன் குறைத்து விட மாட்டான்.

36. இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்குக் கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான்.

37. அவன் அதை உங்களிடம் கேட்டு வற்புறுத்தினாலும் நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். உங்கள் கபடங்களை அவன் வெளிப்படுத்துவான்.

38. அறிந்து கொள்க! அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவிடுவதற்காக அழைக்கப்பட்டால் உங்களில் கஞ்சத்தனம் செய்வோரும் உள்ளனர். யாரேனும் கஞ்சத்தனம் செய்தால் அவர் தமக்கே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ் தேவையற்றவன். நீங்களே தேவைப்படுவோர். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு ஒரு சமுதாயத்தை உங்களுக்குப் பகரமாக அவன் ஆக்குவான். பின்னர் அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: