29 – அல் அன்கபூத்

அத்தியாயம்: 29 அல் அன்கபூத் – சிலந்தி, மொத்த வசனங்கள்: 69

இந்த அத்தியாயத்தின் 41 வது வசனத்தில் தவறான கடவுள் கொள்கை உடையவர்களின் உதாரணமாக சிலந்தி வலை கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. அலிஃப், லாம், மீம்.

2. “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?

3. அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான்.

4. தீமைகளைச் செய்தோர் நம்மை மிஞ்சி விடலாம் என்று நினைத்து விட்டார்களா? அவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிகவும் கெட்டது.

5. யார் அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்க்கிறாரோ அதற்கான அல்லாஹ்வின் காலக்கெடு வந்தே தீரும். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

6. உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.

7. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரின் தீமைகளை அவர்களை விட்டும் அழித்து விடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றுக்குக் கூலி வழங்குவோம்.

8. தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

9. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை நல்லோருடன் சேர்ப்போம்.

10. “அல்லாஹ்வை நம்பினோம்” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ்வின் விஷயத்தில் அவர்களுக்குத் தொல்லையளிக்கப்பட்டால் மனிதர்களின் தொந்தரவை அல்லாஹ்வின் வேதனையைப் போல் அவர்கள் கருதுகின்றனர். உமது இறைவனிடமிருந்து உதவி வந்தால் “நாங்கள் உங்களுடன் இருந்தோம்” எனக் கூறுகின்றனர். அகிலத்தாரின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன் இல்லையா?

11. நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் அறிவான். நயவஞ்சகர்களையும் அறிவான்.

12. “எங்கள் வழியைப் பின்பற்றுங்கள்! உங்கள் தவறுகளை நாங்கள் சுமந்து கொள்கிறோம்” என்று (ஏக இறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர். அவர்களின் குற்றங்களில் எதையும் இவர்கள் சுமப்போராக இல்லை. அவர்கள் பொய்யர்கள்.

13. அவர்கள் தமது சுமைகளையும், தமது சுமைகளுடன் வேறு சில சுமைகளையும் சுமப்பார்கள். அவர்கள் இட்டுக்கட்டியது பற்றி கியாமத் நாளில் விசாரிக்கப்படுவார்கள்.

14. நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக் கொண்டது.

15. அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.

16. “அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கே அஞ்சுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று இப்ராஹீம் தமது சமுதாயத்திடம் கூறியதை நினைவூட்டுவீராக!

17. அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

18. நீங்கள் பொய்யெனக் கருதினால் உங்களுக்கு முன் பல சமுதாயத்தினர் பொய்யெனக் கருதியுள்ளனர். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர தூதர் மீது வேறு (கடமை) இல்லை.

19. அல்லாஹ் முதலில் எவ்வாறு படைக்கிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? பின்னர் மீண்டும் அதை உருவாக்குவான். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

20. பூமியில் பயணம் செய்யுங்கள்! “அல்லாஹ் எவ்வாறு முதலில் படைத்தான்” என்பதைக் கவனியுங்கள்! என்று கூறுவீராக! பின்னர் அல்லாஹ் மற்றொரு தடவை உற்பத்தி செய்வான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

21. தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோருக்கு அருள் புரிவான். அவனிடமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்!

22. பூமியிலும், வானத்திலும் நீங்கள் (இறைவனை) வெல்வோர் அல்லர். அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பொறுப்பாளரோ, உதவுபவரோ இல்லை.

23. அல்லாஹ்வின் வசனங்களையும், அவனது சந்திப்பையும் மறுப்போர் எனது அருளில் நம்பிக்கையிழந்து விட்டனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

24. “இவரைக் கொல்லுங்கள்! அல்லது தீயிட்டுப் பொசுக்குங்கள்!” என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை. அவரை அல்லாஹ் நெருப்பிலிருந்து காப்பாற்றினான். நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

25. இவ்வுலக வாழ்வில் உங்களுக்கிடையே உள்ள நேசத்தின் காரணமாகவே அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். பின்னர் கியாமத் நாளில் உங்களில் ஒருவர் மற்றவரை மறுப்பார். உங்களில் ஒருவர் மற்றவரைச் சபிப்பார். உங்கள் தங்குமிடம் நரகமாகும். உங்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை.

26. அவரை லூத் நம்பினார். “நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.

27. அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் வழங்கினோம். அவரது வழித் தோன்றல்களில் நபி எனும் தகுதியையும், வேதத்தையும் வழங்கினோம். அவருக்கு அவரது கூலியை இவ்வுலகில் கொடுத்தோம். அவர் மறுமையிலும் நல்லோர்களில் இருப்பார்.

28. லூத்தையும் (அனுப்பினோம்). “நீங்கள் வெட்கக்கேடான செயலைச் செய்கிறீர்கள்! அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை”

29. “சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா?” என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறிய போது, “நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.

30. “என் இறைவா! சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக!” என்று அவர் கூறினார்.

31. நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்த போது “அவ்வூரார் அநியாயக்காரர்களாக உள்ளனர்; அவ்வூராரை நாங்கள் அழிக்கப் போகிறோம்” என்றனர்.

32. “அங்கே லூத் இருக்கிறாரே” என்று அவர் கேட்டார். “அங்குள்ளவர்களை நாங்கள் நன்றாக அறிவோம். அவரையும், அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம். அவரது மனைவியைத் தவிர. அவள் (அழிவோருடன்) தங்கி விடுவாள்” என்றனர்.

33. நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களால் கவலைக்கும், மன நெருக்கடிக்கும் உள்ளானார். அதற்கவர்கள் “நீர் பயப்படாதீர்! கவலைப்படாதீர்! உம்மையும், உமது குடும்பத்தினரையும், நாங்கள் காப்பாற்றுவோம். உமது மனைவியைத் தவிர. (அழிவோருடன்) அவள் தங்கி விடுவாள்” என்றனர்.

34. “அவர்கள் குற்றம் புரிந்ததால் அவ்வூரார் மீது வானிலிருந்து வேதனையை நாங்கள் இறக்கப் போகிறோம்” (என்றும் கூறினர்)

35. விளங்கக்கூடிய சமுதாயத்திற்கு அங்கே தெளிவான சான்றை விட்டு வைத்துள்ளோம்.

36. மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! இறுதி நாளை நம்புங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!” என்று அவர் கூறினார்.

37. அவரைப் பொய்யரெனக் கருதினர். அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.

38. ஆது மற்றும் ஸமூது சமுதாயத்தினரையும் (அழித்தோம்). அவர்களின் குடியிருப்புக்களிலிருந்து இது உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. அவர்களது செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். அவர்கள் அறிவுடையோராக இருந்த போதும் (நல்) வழியை விட்டும் அவர்களைத் தடுத்தான்.

39. காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான் ஆகியோரையும் அழித்தோம். அவர்களிடம் மூஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர்கள் பூமியில் அகந்தை கொண்டனர். அவர்கள் வெல்வோராக இருக்கவில்லை.

40. ஒவ்வொருவரையும் அவரவரின் பாவத்துக்காகத் தண்டித்தோம். அவர்களில் சிலர் மீது கல் மழையை அனுப்பினோம். அவர்களில் வேறு சிலரைப் பெரும் சப்தம் தாக்கியது. அவர்களில் சிலரைப் பூமிக்குள் உயிருடன் புதையச் செய்தோம். அவர்களில் சிலரை மூழ்கடித்தோம். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைப்பவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.

41. அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (இதை) அவர்கள் அறியக் கூடாதா?

42. அல்லாஹ்வையன்றி அவர்கள் பிரார்த்திப்பவற்றை அல்லாஹ் அறிவான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

43. இந்த முன்னுதாரணங்களை மக்களுக்காகக் கூறுகிறோம். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதை விளங்க மாட்டார்கள்.

44. வானங்களையும், பூமியையும் தக்க காரணத்துடன் அல்லாஹ் படைத்தான். நம்பிக்கை கொண்டோருக்கு இதில் சான்று இருக்கிறது.

45. (முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

46. வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம்அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! “எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று கூறுங்கள்!

47. இவ்வாறே உமக்கு இவ்வேதத்தை அருளினோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இதை நம்புகின்றனர். (வேதம் கொடுக்கப்படாத) இவர்களிலும் இதை நம்புவோர் உள்ளனர். (நம்மை) மறுப்போரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை நிராகரிப்பதில்லை.

48. (முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்!&  அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

49. மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.

50. “இவருக்கு இவரது இறைவனிடமிருந்து அற்புதங்கள் அருளப்படக் கூடாதா?” என்று கேட்கின்றனர். “அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் மட்டுமே” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

51. உமக்கு இவ்வேதத்தை நாம் அருளி, அது அவர்களுக்குக் கூறப்படுவது அவர்களுக்குப் போதவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் அருளும், அறிவுரையும் உள்ளது.

52. எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். அவன் வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அறிகிறான். வீணானதை நம்பி அல்லாஹ்வை மறுப்போரே இழப்பை அடைந்தவர்கள் என்று கூறுவீராக!

53. வேதனையை உம்மிடத்தில் அவசரமாகத் தேடுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு இல்லாதிருந்தால் வேதனை அவர்களுக்கு வந்திருக்கும். அவர்கள் உணராத நிலையில் திடீரென அது அவர்களிடம் வரும்.

54. உம்மிடம் வேதனையை அவசரமாகத் தேடுகின்றனர். (ஏக இறைவனை) மறுப்போரை நரகம் சுற்றி வளைக்கும்.

55. அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில் “நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்!” என்று (இறைவன்) கூறுவான்.

56. நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! எனது பூமி விசாலமானது. என்னையே வணங்குங்கள்!

57. ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

58. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.

59. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள். தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

60. எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

61. “வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். அப்படியாயின் “எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?”

62. அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடனும் வழங்குகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

63. “வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்தபின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

64. இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?

65. அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

66. நாம் அவர்களுக்கு வழங்கியதை அவர்கள் மறுக்கட்டும்! அனுபவிக்கட்டும்! பின்னர் அறிந்து கொள்வார்கள்.

67. இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

68. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யெனக் கருதியவனை விட அநீதி இழைத்தவன் யார்? (ஏக இறைவனை) மறுப்போருக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?

69. நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: