21 – அல் அன்பியா

அத்தியாயம்: 21 அல் அன்பியா – நபிமார்கள், மொத்த வசனங்கள்: 112

மூஸா, ஹாரூன், இப்ராஹீம், லூத், இஸ்ஹாக், யஃகூப், நூஹ், தாவூத், ஸுலைமான், அய்யூப், இஸ்மாயீல், இத்ரீஸ், துல் கிஃப்ல், யூனுஸ், ஸகரிய்யா ஆகிய நபிமார்கள் குறித்து பேசப்படுவதால் இந்த அத்தியாயம் நபிமார்கள் என்று பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. மனிதர்களுக்கு அவர்களின் விசாரணை நெருங்கி விட்டது. அவர்களோ புறக்கணித்து, கவனமின்றி உள்ளனர்.

2. தங்களின் இறைவனிடமிருந்து புதிதாக ஒரு செய்தி அவர்களிடம் வரும்போதெல்லாம் விளையாட்டாகவே அதைச் செவிமடுக்கின்றனர்.

3. அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. “இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?” என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.

4. “என் இறைவன் வானத்திலும், பூமியிலும் உள்ள சொல்லை அறிகிறான். அவன் அறிபவன்; செவியுறுபவன்” என்று (தூதர்) கூறினார்.

5. அதற்கவர்கள் “இ(வர் கூறுவ)து அர்த்தமற்ற கனவு! இல்லை! இதை இவராக இட்டுக் கட்டினார்! இல்லை! இவர் ஒரு கவிஞர்! முன்னோர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற சான்றை அவர் நம்மிடம் கொண்டு வரட்டும்” என்று கூறுகின்றனர்.

6. இவர்களுக்கு முன்னர் நாம் அழித்த எந்த ஊரும் நம்பிக்கை கொள்ளவில்லை. இவர்கள் நம்பிக்கை கொள்வார்களா?

7. (முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!

8. உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.

9. அவர்களுக்கு (அளித்த) வாக்குறு தியைப் பின்னர் உண்மையாக்கி அவர்களையும், நாம் நாடியோரையும் காப்பாற்றி னோம். வரம்பு மீறியோரை அழித்தோம்.

10. உங்களிடம் ஒரு வேதத்தை அருளினோம். அதில் உங்களுக்கு அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா?

11. அநீதி இழைத்துக் கொண்டிருந்த எத்தனையோ ஊர்களை வேரறுத்தோம். அதற்குப் பின் மற்றொரு சமுதாயத்தை உருவாக்கினோம்.

12. நமது வேதனையை அவர்கள் உணர்ந்த போது உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

13. ஓட்டம் பிடிக்காதீர்கள்! நீங்கள் அனுபவித்தவற்றுக்கும், உங்கள் குடியிருப் புக்களுக்கும் திரும்புங்கள்! நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (என்று கூறப்பட்டது)

14. “எங்களுக்குக் கேடு தான். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்” என்று அவர்கள் கூறினர்.

15. அறுவடை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது போல் அவர்களை நாம் ஆக்கும் வரை இதுவே அவர்களின் கூப்பாடாக இருந்தது.

16. வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை.

17. வேடிக்கையை (விளையாட்டை) ஏற்படுத்திக் கொள்வதாக இருந்தால் நம்மிட மிருந்தே அதை ஏற்படுத்தியிருப்போம். நாம் (எதையும்) செய்யக்கூடியவரே.

18. உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.

19. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அவனிடத்தில் இருப்போர் அவனது வணக்கத்தை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள். சோர்வடையவும் மாட்டார்கள்.

20. இரவிலும், பகலிலும் துதிப்பார்கள். சலிப்படைய மாட்டார்கள்.

21. கடவுள்களைப் பூமியிலிருந்து இவர்கள் தயாரிக்கிறார்களா? அவர்கள் உயிர் கொடுத்து எழுப்புவார்களா?

22. அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

23. அவன் செய்வது பற்றி விசாரிக்கப்பட மாட்டான். அவர்களே விசாரிக்கப்படுவார்கள்.

24. அவனையன்றி கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்களா? “உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்! இதுவே என்னுடனிருப்போரின் அறிவுரையும், எனக்கு முன் சென்றோரின் அறிவுரையுமாகும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிய மாட்டார்கள். அவர்கள் புறக்கணிப்பவர்கள்.

25. “என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!” என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.

26. “‘அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்” எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள்.

27. அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

28. அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள்.

29. “அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்” என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

30. வானங்களும், பூமியும் இணைந் திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரி லிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?

31. பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதற்காக முளைகளைஏற்படுத்தினோம். அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்படுத்தினோம்.

32. வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.

33. அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.

34. (முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருக்கக் கூடியவர்களா?

35. ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

36. (முஹம்மதே! ஏக இறைவனை) மறுப்போர் உம்மைக் காணும் போது உம்மைக் கேலிப் பொருளாகவே கருதுகின்றனர். இவர் தான் உங்கள் கடவுள்களைப் பற்றி விமர்சிப்பவரா? (எனக் கூறுகின்றனர்.) அவர்கள் அளவற்ற அருளாளனை நினைவு கூர மறுப்பவர்கள்.

37. மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான். பின்னர் எனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுவேன். என்னிடம் அவசரப்படாதீர்கள்!

38. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிகழும்?)” என்று கேட்கின்றனர்.

39. நரகத்திலிருந்து தமது முகங்களையும், முதுகுகளையும் தடுக்க முடியாத நேரத்தை (ஏக இறைவனை) மறுப்போர் அறிய வேண்டாமா? அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

40. மாறாக, அது அவர்களிடம் திடீரென்று வந்து அவர்களைத் திகைக்க வைக்கும். அதைத் தடுக்க அவர்களுக்கு இயலாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.

41. (முஹம்மதே!) உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தோரைச் சுற்றி வளைத்தது.

42. “இரவிலும், பகலிலும் அளவற்ற அருளாளனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?” என்று கேட்பீராக! எனினும் அவர்கள் தமது இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கின்றனர்.

43. நம்மை விட்டும் அவர்களைக் காப்பாற்றும் கடவுள்கள் அவர்களுக்கு உள்ளனரா? அவர்கள் தமக்கே உதவிட இயலாது. அவர்கள் நம்மிடமிருந்து காக்கப்படவும் மாட்டார்கள்.

44. அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம். “பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம்” என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்?

45. “தூதுச் செய்தியைக் கொண்டே உங்களை எச்சரிக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! எச்சரிக்கப்படும் போது அழைப்பை, செவிடன் செவியுற மாட்டான்.

46. உமது இறைவனின் வேதனையில் சிறிதளவு அவர்களுக்கு ஏற்பட்டால் “எங்களுக்குக் கேடு தான். நாங்கள் அநீதி இழைத்தோம்” எனக் கூறுவார்கள்.

47. கியாமத் நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.

48. வேறுபடுத்திக் காட்டுவதையும், ஒளியையும், (நம்மை) அஞ்சுவோருக்கு அறிவுரையையும் மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் அளித்தோம்.

49. அவர்கள் தனிமையில் தமது இறைவனை அஞ்சுவார்கள். அந்த நேரம்பற்றியும் அஞ்சுவார்கள்.

50. இது பாக்கியம் நிறைந்த அறிவுரை. இதை நாமே அருளினோம். இதையா நீங்கள் மறுக்கிறீர்கள்?

51. இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர் வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம்.

52, 53. “நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்” என்று அவர்கள் கூறினர்.

54. “நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார்.

55. “நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

56. “அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்” என்று அவர் கூறினார்.

57. “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்)

58. அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.

59. “நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்” என்று அவர்கள் கூறினர்.

60. “ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர்.

61. “அவரை மக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்” என்றனர்.

62. “இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

63. அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது.அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார்.

64. உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.

65. பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர்.

66. “அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார்.

67. “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)

68. “நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்றனர்.

69. “நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு” என்று கூறினோம்.

70. அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை இழப்பை அடைந்தோராக ஆக்கினோம்.

71. அவரையும், லூத்தையும் காப்பாற்றி நாம் அகிலத்தாருக்குப் பாக்கியமாக ஆக்கிய பூமியில் (சேர்த்தோம்).

72. அவருக்கு இஸ்ஹாக்கையும், கூடுதலாக யஃகூபையும் அன்பளிப்புச் செய்தோம். அனைவரையும் நல்லோராக ஆக்கினோம்.

73. நமது கட்டளைப்படி நேர் வழி காட்டும் தலைவர்களாக அவர்களை ஆக்கினோம். நல்லவற்றைச் செய்யுமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் நம்மையே வணங்குவோராக இருந்தனர்.

74. லூத்துக்கு அதிகாரத்தையும், கல்வியையும் அளித்தோம். வெட்கக் கேடான காரியங்களைச் செய்து வந்த கிராமத்திலிருந்து அவரைக் காப்பாற்றி னோம். அவர்கள் கெட்ட கூட்டமாகவும், குற்றம் புரிவோராகவும் இருந்தனர்.

75. அவரை நமது அருளில் நுழைத் தோம். அவர் நல்லோர்களில் ஒருவர்.

76. நூஹ், இதற்கு முன் (நம்மிடம்) பிரார்த்தித்த போது, அவருக்காக (அதை) ஏற்றுக் கொண்டோம். அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றினோம்.

77. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்திலிருந்து (காப்பாற்றி) அவருக்கு உதவினோம். அவர்கள் கெட்ட கூட்டமாக இருந்தனர். எனவே அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.

78. ஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்) விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும், ஸுலைமானும் தீர்ப்பளித் ததை நினைவூட்டுவீராக! அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்.

79. அதை ஸுலைமானுக்கு விளங்க வைத்தோம். இருவருக்குமே அதிகாரத்தையும், கல்வியையும் வழங்கினோம். பறவைகளையும், மலைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை (இறைவனைத்) துதித்தன. நாம் (எதையும்) செய்யக்கூடியவராவோம்.

80. உங்கள் போரின் போது உங்களைக் காக்கும் உங்களுக்குரிய கவச ஆடை செய்வதை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். நீங்கள் நன்றி செலுத்துவோராக இருக்கிறீர்களா?

81. வேகமாக வீசும் காற்றை ஸுலைமா னுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.

82. ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.

83, 84. “எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்” என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

85. இஸ்மாயீல், இத்ரீஸ், துல்ஃகிப்ல் அனைவரும் பொறுமையாளர்கள்.

86. அவர்களை நமது அருளில் நுழையச் செய்தோம். அவர்கள் நல்லவர்கள்.

87. மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். “அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்” என்று நினைத்தார். “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி வி ட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.

88. அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

89, 90. “என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்” என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்த போது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக் காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

91. தனது கற்பைக் காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம். அவரையும், அவரது புதல்வரையும் அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.

92. உங்கள் இந்தச் சமுதாயம் ஒரே சமுதாயமே. நானே உங்களின் இறைவன். என்னையே வணங்குங்கள்!

93. அவர்களோ தமது காரியத்தில் தமக்கிடையே பிளவுபட்டுள்ளனர். அனைவரும் நம்மிடம் திரும்பி வருவோரே.

94. நம்பிக்கை கொண்டு நல்லறங்களைச் செய்வோரின் உழைப்புக்கு எந்த மறுப்பும் இல்லை. அதை நாம் பதிவு செய்கிறோம்

95. நாம் அழித்து விட்ட ஊராருக்கு (மீண்டு வருவது) தடுக்கப்பட்டு விட்டது. அவர்கள் திரும்ப வர மாட்டார்கள்.

96. முடிவில் யஃஜூஜ் மஃஜூஜ் (கூட்டத்தினர்) திறந்து விடப்பட்டு அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைவார்கள்.

97. உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. அப்போது (ஏக இறைவனை) மறுத்தோரின் பார்வைகள் நிலை குத்தியதாக இருக்கும். “எங்களுக்குக் கேடு தான். நாங்கள் இது பற்றிக் கவனமற்று இருந்து விட்டோம். இல்லை! நாங்கள் அநீதி இழைத்தோம்” (என்று கூறுவார்கள்).

98. நீங்களும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவைகளும் நரகத்தின் எரிபொருளாவீர்! அங்கே நீங்கள் வந்து சேர்பவர்களே!

99. அவர்கள் கடவுள்களாக இருந்திருந்தால் இங்கே வந்திருக்க மாட்டார்கள். அனைவரும் இதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

100. அங்கே அவர்களுக்கு விம்மியழுதலே உண்டு. அவர்கள் அங்கே எதையும் செவியுற மாட்டார்கள்.

101. யாரைப் பற்றி நமது நல்லுதவி முந்தி விட்டதோ அவர்கள் அதை விட்டும் தூரமாக்கப்பட்டவர்கள்.

102. அவர்கள் அதன் இரைச்சலைச் செவியுற மாட்டார்கள். தமது உள்ளங்கள் ஆசைப்படுவதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

103. மாபெரும் திடுக்கம் அவர்களைக் கவலையில் ஆழ்த்தாது. வானவர்கள் அவர்களை எதிர்கொள்வார்கள். “இதுவே உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள்1” (எனக் கூறுவார்கள்).

104. எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.

105. ஸபூர் வேதத்தில் அறிவுரைக்குப் பின் “பூமியை எனது நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள்” என்று எழுதியிருந்தோம்.

106. வணங்கும் சமுதாயத்துக்கு இதில் போதுமானது உள்ளது.

107. (முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

108. “உங்கள் இறைவன் ஒரே இறைவனே” என்பதே எனக்கு அறிவிக்கப்படுகிறது. நீங்கள் (இதை) ஏற்கிறீர்களா?” என்று கேட்பீராக!

109. அவர்கள் புறக்கணித்தால் “உங்கள் அனைவருக்கும் சமமாக அறிவித்து விட்டேன். உங்களுக்கு எச்சரிக்கப்படுவது அருகில் உள்ளதா? தூரத்தில் உள்ளதா? என்பதை அறிய மாட்டேன்” என்று கூறுவீராக!

110. அவன் உரத்த சொல்லையும் அறிகிறான். நீங்கள் மறைப்பவற்றையும் அறிகிறான்.

111. இது (உலக வாழ்க்கை) உங்களுக்குச் சோதனையாகவும், குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கை வசதியாகவும் இருக்குமா? என்பதை அறிய மாட்டேன்.

112. என் இறைவா! நீ உண்மையான தீர்ப்பை வழங்குவாயாக! “நீங்கள் கூறுவதற்கு எதிராக எங்கள் இறைவனாகிய அளவற்ற அருளாளன் தான் உதவி தேடப்படுபவன்” என (தூதர்) கூறினார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: