12 – யூஸுஃப்

அத்தியாயம்: 12 யூஸுஃப் – ஓர் இறைத் தூதரின் பெயர், மொத்த வசனங்கள்: 111

இந்த அத்தியாயம் முழுவதும் யூஸுஃப் என்ற இறைத்தூதரின் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது. ஒரு அத்தியாயத்தில் முழுமையாக ஒருவரது வரலாறு கூறப்படுவது இந்த அத்தியாயத்தில் மட்டும் தான். எனவே இந்த அத்தியாயம் யூஸுஃப் என பெயர்பெற்றது. இந்த அத்தியாயத்தைப் பற்றி அழகிய வரலாறு என்று அல்லாஹ்வே இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் குறிப்பிடுகிறான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. அலிஃப், லாம் ரா. இது தெளிவான வேதத்தின் வசனங்கள்.

2. நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம்.

3. (முஹம்மதே!) இந்தக் குர்ஆனை உமக்கு அறிவித்திருப்பதன் மூலம் மிக அழகான வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். இதற்கு முன் நீர் (இதனை) அறியாதவராக இருந்தீர்.

4. “என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்” என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

5. “என் அருமை மகனே! உனது கனவை உனது சகோதரர்களிடம் கூறாதே! அவர்கள் உனக்கு எதிராகக் கடும் சூழ்ச்சி செய்வார்கள். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரி” என்று அவர் கூறினார்.

6. “இவ்வாறே உன்னை உனது இறைவன் தேர்வு செய்து, (பல்வேறு) செய்திகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுத் தருவான். இதற்கு முன் உனது தந்தையரான இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோருக்கு தனது அருளை நிறைவுபடுத்தியது போல் உன் மீதும், யஃகூபின் குடும்பத்தார் மீதும் தனது அருளை அவன் நிறைவுபடுத்துவான். உனது இறைவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்” (என்றும் அவர் கூறினார்.)

7. (விளக்கம்) கேட்போருக்கு யூஸுஃபிடமும், அவரது சகோதரர்களிடமும் பல சான்றுகள் உள்ளன.

8. “நாம் ஒரு கூட்டமாக இருந்தும் யூஸுஃபும், அவரது சகோதரரும் நம்மை விட நமது தந்தைக்கு மிக விருப்பமாக உள்ளனர். நமது தந்தை பகிரங்க வழி கேட்டிலேயே இருக்கிறார்” என்று (அவரது சகோதரர்கள்) கூறியதை நினைவூட்டுவீராக!

9. “யூஸுஃபைக் கொன்று விடுங்கள்! அல்லது ஏதாவது நிலப்பரப்பில் அவரை வீசி எறிந்து விடுங்கள்! உங்கள் தந்தை யின் கவனம் உங்களிடமே இருக்கும். அதன் பிறகு நல்ல மக்களாக நீங்கள் ஆகிக் கொள்ளலாம்” (எனவும் கூறினர்.)

10. “நீங்கள் (எதுவும்) செய்வதாக இருந்தால் யூஸுஃபைக் கொலை செய்யாதீர்கள்! அவரை ஆழ் கிணற்றுக்குள் போட்டு விடுங்கள்! பயணிகளில் யாரேனும் அவரை எடுத்துக் கொள்வார்கள்” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.

11. “எங்கள் தந்தையே! நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் ஏன் எங்களை நம்புவதில்லை? நாங்கள் அவருக்கு நலம் நாடுபவர்கள்” என்று அவர்கள் கூறினர்.

12. “நாளை எங்களுடன் அவரை அனுப்புங்கள்! அவர் நன்கு புசிப்பார்; விளையாடுவார்; நாங்கள் அவரைப் பாதுகாப்பவர்கள்” (எனவும் கூறினர்).

13. “அவரை நீங்கள் கூட்டிச் செல்வது எனக்குக் கவலையளிக்கும். அவரை நீங்கள் கவனிக்காது இருக்கும் போது ஓநாய் அவரைத் தின்று விடுமோ என அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார்.

14. “நாங்கள் ஒரு கூட்டமாக இருக்கும் நிலையில் அவரை ஓநாய் தின்று விட்டால் நாங்கள் அப்போது இழப்பை அடைந்தோரே” என்று அவர்கள் கூறினர்.

15. அவரை அவர்கள் கூட்டிச் சென்ற போது, ஆழ் கிணற்றுக்குள் அவரைப் போடுவதென்று ஒரு மனதாக முடிவு செய்தனர். “(பிற்காலத்தில்) அவர்களது இந்தக் காரியம் பற்றி அவர்களுக்கு நீர் கூறுவீர்” என்று அவர்கள் அறியாத வகையில் யூஸுஃபுக்கு அறிவித்தோம்.

16. அவர்கள் அழுது கொண்டே இரவில் தந்தையிடம் வந்தார்கள்.

17. “எங்கள் தந்தையே! நாங்கள் போட்டி போட்டு ஓடினோம். எங்கள் பொருளுக்கருகில் யூஸுஃபை விட்டுச் சென்றோம். அப்போது அவரை ஓநாய் தின்று விட்டது. நாங்கள் உண்மை கூறுவோராக இருந்த போதும் நீங்கள் எங்களை நம்புபவராக இல்லை” என்றனர்.

18. அவரது சட்டையைப் பொய்யான இரத்தத்துடன் கொண்டு வந்தனர். “உங்கள் உள்ளங்கள் உங்களுக்கு ஒரு காரியத்தை அழகாகச் சித்தரித்து விட்டன. அழகிய பொறுமையை மேற்கொள்கிறேன். நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று அவர் கூறினார்.

19. ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தண்ணீர் எடுத்து வருபவரை அனுப்பினார்கள். அவர் தனது வாளியை (கிணற்றில்) விட்டார். “இந்த நற்செய்தியைக் கேளுங்கள்! இதோ ஒரு சிறுவன்!” என்றார். அவரை வர்த்தகப் பொருளாக எடுத்து, மறைத்துக் கொண்டனர். அவர்கள் செய்ததை அல்லாஹ் அறிந்தவன்.

20. எண்ணுவதற்கு எளிதான சில வெள்ளிக் காசுகளுக்கு, அற்ப விலைக்கு அவரை விற்று விட்டனர். அவர் விஷயத்தில் அவர்கள் பணத்தாசை இல்லாதிருந்தனர்.

21. எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர், தன் மனைவியிடம் “இவரை மரியாதையாக நடத்து! இவர் நமக்குப் பயன்படக் கூடும். அல்லது இவரை நாம் புதல்வனாக்கிக் கொள்ளலாம்” எனக் கூறினார். இவ்வாறே அப்பூமியில் யூஸுஃபுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தோம். (பல் வேறு) செய்திகளின் விளக்கத்தை அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம். அல்லாஹ் தன் காரியத்தில் வெல்பவன்; எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

22. அவர் பருவத்தை அடைந்ததும் அவருக்கு அதிகாரத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்.

23. எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து “வா!’ என்றாள். அதற்கவர் “அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெறமாட்டார்கள்” எனக் கூறினார்.

24. அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர்.

25. இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள். அப்போது அவளது கணவனை வாசல் அருகே இருவரும் கண்டனர். “உமது மனைவியிடம் தீய செயல் செய்ய நினைத்தவருக்கு சிறையிலடைத்தல், அல்லது துன்புறுத்தும் வேதனை தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?” என்று அவள் கூறினாள்.

26, 27. “இவள் தான் என்னை மயக்கலானாள்” என்று அவர் கூறினார். “அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மையாளர்” என்று அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுரைத்தார்.

28. அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது, “இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது” என்றார்.

29. ” யூஸுஃபே! இதை அலட்சியம் செய்து விடு!” (என்று யூஸுஃபிடம் கூறி விட்டு மனைவியை நோக்கி) உனது பாவத்துக்கு மன்னிப்புத் தேடிக் கொள்! நீயே குற்றவாளி. (எனவும் கூறினார்).

30. “அமைச்சரின் மனைவி தனது அடிமையை மயக்கப் பார்த்திருக்கிறாள். அந்த அடிமை அவளைக் காதலால் கவர்ந்து விட்டான். அவள் பகிரங்க வழி கேட்டில் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்” என்று அந்நகரத்திலுள்ள பெண்கள் கூறினர்.

31. அப்பெண்களது சூழ்ச்சியைப் பற்றி அவள் கேள்விப்பட்ட போது, அவர்களை அழைத்து வரச் செய்தாள். அவர்களுக்கு விருந்தையும் ஏற்பாடு செய்தாள். அவர்களில் ஒவ்வொருத்திக்கும் ஒரு கத்தியையும் கொடுத்தாள். (யூýஸுஃபிடம்) “அவர்களை நோக்கிச் செல்” என்று கூறினாள். அவரை அப்பெண்கள் கண்டவுடன், மலைத்துப் போயினர். தமது கைகளையும் வெட்டிக் கொண்டனர். “அல்லாஹ் தூயவன். இவர் மனிதரே இல்லை. இவர் கண்ணியமான வானவர் தவிர வேறில்லை” என்றனர்.

32. “இவரைக் குறித்துத் தான் என்னைப் பழித்தீர்கள். இவரை நான் தான் மயக்கப் பார்த்தேன். இவர் விலகிக் கொண்டார். நான் கட்டளையிடுவதை இவர் செய்யாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவார். சிறுமையானவராக ஆவார்” என்று அவள் கூறினாள்.

33. “என் இறைவா! இப்பெண்கள் அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றாவிட்டால் இவர்களை நோக்கிச் சாய்ந்து, அறிவீனனாக ஆகி விடுவேன்” என்றார்.

34. இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அவர்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

35. (அவர் குற்றமற்றவர் என்பதற்கான) சான்றுகளைக் கண்ட பின்னரும், “குறிப்பிட்ட காலம் வரை அவரைச் சிறையிலடைக்க வேண்டும்” என்று அவர்களுக்குத் தோன்றியது.

36. அவருடன் இரு இளைஞர்கள் சிறைக்குச் சென்றனர். “நான் மதுரசம் பிழிவதைப் போல் கனவு கண்டேன்” என்று ஒருவர் கூறினார். “நான் என் தலையில் ரொட்டியைச் சுமந்திருக்க, அதைப் பறவை சாப்பிடக் (கனவு) கண்டேன்” என்று இன்னொருவர் கூறினார். “இதன் விளக்கத்தை எங்களுக்குக் கூறுவீராக! உம்மை நன்மை செய்வோரில் ஒருவராக நாங்கள் காண்கிறோம்” (என்றனர்).

37. “(கனவில்) உங்களுக்கு எந்த உணவு வழங்கப்படுவதாக இருந்தாலும், அது பலிப்பதற்கு முன் அது பற்றிய விளக்கத்தை உங்களுக்கு அறிவித்து விடுவேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுத் தந்தது.122 அல்லாஹ்வை நம்பாத, மறுமையையும் மறுக்கின்ற கூட்டத்தின் மார்க்கத்தை (ஏற்காது) நான் விட்டுவிட்டேன்” என்று அவர் கூறினார்.

38. “என் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்கலாகாது. இது எங்களுக்கும், மனித குலத்துக்கும் அல்லாஹ் செய்த அருள். எனினும் அதிகமான மக்கள் நன்றி செலுத்துவதில்லை.”

39. “என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள் (இருப்பது) சிறந்ததா? அடக்கியாளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வா?”

40. “அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. “அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது’ என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.”

41. “என் சிறைத் தோழர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானனுக்குப் மதுவைப் புகட்டுவார். மற்றவர் சிலுவையில் அறையப்படுவார். அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும். எது குறித்து விளக்கம் கேட்கிறீர்களோ அந்த விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டது” (என்றார்.)

42. அவ்விருவரில் யார் விடுதலையாவார் என்று நினைத்தாரோ அவரிடம் “என்னைப் பற்றி உமது எஜமானனிடம் கூறு!” என்று யூஸுஃப் கூறினார். அவர் தமது எஜமானனிடம் கூறுவதை ஷைத்தான் மறக்கச் செய்து விட்டான். எனவே அவர் (யூசுஃப்) சிறையில் பல வருடங்கள் தங்கினார்.

43. “கொழுத்த ஏழு மாடுகளை, மெலிந்த ஏழு மாடுகள் தின்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்த வேறு கதிர்களையும் நான் (கனவில்) கண்டேன். பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறுவோராக இருந்தால் எனது கனவுக்கு விளக்கம் தாருங்கள்!” என்று மன்னர் கூறினார்.

44. “இவை அர்த்தமற்ற கனவு. அர்த்தமற்ற கனவின் விளக்கத்தை நாங்கள் அறிந் திருக்கவில்லை” என்று அவர்கள் கூறினர்.

45. “நான் உங்களுக்கு அதற்கான விளக்கம் தருகிறேன். என்னை அனுப்புங்கள்!” என்று அவ்விருவரில் விடுதலையானவர் நீண்ட காலத்திற்குப் பின் நினைவு வந்தவராக கூறினார்.

46. யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு மெலிந்த மாடுகள், ஏழு கொழுத்த மாடுகளைத் தின்றதற்கும், ஏழு பசுமையான கதிர்கள் மற்றும் காய்ந்த கதிர்களுக்கும் எங்களுக்கு விளக்கம் தருவீராக! மக்களிடம் (இத்தகவலுடன்) நான் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் விளங்கிக் கொள்வார்கள் (என்றார்.)

47. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் விவசாயம் செய்வீர்கள். அறுவடை செய்தவற்றை உண்பதற்காக குறைவான அளவைத் தவிர மற்றவற்றைக் கதிர்களுடன் விட்டு வையுங்கள்!

48. இதன் பிறகு பஞ்சமான ஏழு (ஆண்டுகள்) வரும். அவற்றுக்காக நீங்கள் முன்னர் இருப்பு வைத்தவற்றில் சிலவற்றைத் தவிர மற்றவற்றை அவை சாப்பிட்டுவிடும்.

49. “இதன் பிறகு மக்களுக்கு மழை பொழியும் ஆண்டு வரும். அந்த ஆண்டில் பழரசங்களைப் பிழிவார்கள்” (என்றார்)

50. (இதைக் கேட்ட) மன்னர் “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்றார். (மன்னரின்) தூதுவர் அவரிடம் வந்தார். அதற்கு யூஸுஃப் “உமது எஜமானனிடம் சென்று “தமது கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் நிலை என்ன? என்று அவரிடம் கேள்! என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை அறிந்தவன்” என்றார்.

51. “யூஸுஃபை நீங்கள் மயக்க முயன்ற போது உங்களுக்கு நேர்ந்ததென்ன?” என்று (அரசர் பெண்களிடம்) விசாரித்தார். அதற்கு அவர்கள் “அல்லாஹ் தூயவன். அவரிடம் எந்த ஒழுக்கக்கேட்டையும் நாங்கள் அறியவில்லை” என்றனர். “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் அவரை மயக்க முயன்றேன். அவர் உண்மையாளர்” என்று அமைச்சரின் மனைவி கூறினார்.

52. “(என் எஜமானராகிய) அவர் மறைவாக இருந்த போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும், துரோகமிழைப்போரின் சூழ்ச்சிக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான் என்பதையும் அவர் அறிவதற்காக (இவ்வாறு விசாரணை கோரினேன்” என்று யூஸுஃப் கூறினார்.)

53. “எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” (என்றும் கூறினார்).

54. “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! அவரை எனக்காகத் தேர்வு செய்கிறேன்” என்று மன்னர் கூறினார். அவரிடம் மன்னர் பேசிய போது “இன்று நீர் நம்மிடத்தில் நிலையான இடம் பெற்றவராகவும், நம்பிகைக்குரியவராகவும் இருக்கிறீர்” என்றார்.

55. “இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்” என்று அவர் கூறினார்.

56. இப்பூமியில் விரும்பிய இடத்தில் வசித்துக் கொள்ளும் வகையில் இவ்வாறே யூஸுஃபுக்கு அதிகாரம் அளித்தோம். நாம் நாடியோருக்கு நமது அருளை வழங்குவோம். நன்மை செய்தோரின் கூலியை வீணாக்க மாட்டோம்.

57. நம்பிக்கை கொண்டு, (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமையின் கூலியே சிறந்தது.

58. யூஸுஃபுடைய சகோதரர்களும் வந்து, அவரைச் சந்தித்தனர். அவர் அவர்களை அறிந்து கொண்டார். அவர்களால் அவரை அறிந்து கொள்ள முடியவில்லை.

59. அவர்களுக்குரிய சாதனங்களை அவர் கொடுத்த போது, “உங்கள் தந்தையிடமிருந்து உங்கள் சகோதரரை என்னிடம் கொண்டு வாருங்கள்!228 நான் முழுமையாக அளந்து தருவதை நீங்கள் காணவில்லையா? நான் நன்கு உபசரிப்பவன்” என்றார்.

60. “அவரை நீங்கள் கொண்டு வராவிட்டால் என்னிடம் உங்களுக்கு எந்த உணவுப் பொருளும் இல்லை. என்னிடம் நெருங்காதீர்கள்!” என்றும் கூறினார்.

61. “அவரைக் குறித்து அவரது தந்தையிடம் வலியுறுத்துவோம். நாங்கள் (அதைச்) செய்பவர்களே” என்று அவர்கள் கூறினர்.

62. “அவர்கள் கொண்டு வந்த சரக்குகளை அவர்களது பொதிகளிலேயே வைத்து விடுங்கள்! அவர்கள் தமது குடும்பத்தாரிடம் சென்றதும் அதைக் கண்டு விட்டு (திருப்பித் தருவதற்காக) மீண்டும் வரக் கூடும்” என்று தமது பணியாளரிடம் யூஸுஃப் கூறினார்.

63. தமது தந்தையிடம் அவர்கள் சென்றதும், “தந்தையே! (இனி மேல்) உணவுப் பொருள் எங்களுக்குத் தடுக்கப்பட்டு விட்டது. எனவே எங்களுடன் எங்கள் சகோதரரை அனுப்புங்கள்! உணவுப் பொருள் வாங்கி வருகிறோம்; அவரை நாங்கள் பாதுகாப்போம்” என்றனர்.

64. “முன்னர் இவரது சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போல் இவர் விஷயத்திலும் உங்களை நம்புவேனா? அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன். அவன் கருணையாளர்களில் மிகப் பெரும் கருணையாளன்” (என்று அவர் கூறினார்)

65. அவர்கள் தமது பொருளைத் திறந்து பார்த்த போது, தங்களின் பொருட்கள் தங்களிடமே திரும்ப வந்துள்ளதைக் கண்டனர். “எங்கள் தந்தையே! நாங்கள் அக்கிரமம் செய்யவில்லை. இதோ எங்கள் பொருட்கள் எங்களிடமே திரும்ப வந்துள்ளன. நமது குடும்பத்தாருக்காக உணவு வாங்கி வருவோம். எங்கள் சகோதரரையும் பாதுகாப்போம். இன்னொரு ஒட்டகச் சுமையை அதிகமாகப் பெறுவோம். இது எளிதான அளவு தான்” என்றனர்.

66. உங்கள் அனைவருக்கும் ஏதேனும் ஏற்பட்டால் தவிர அவரைக் கொண்டு வந்து நீங்கள் சேர்ப்பதாக அல்லாஹ்வின் பெயரால் நீங்கள் எனக்கு உறுதி மொழி அளிக்காத வரை அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று (யஃகூப்) கூறினார். அவர்கள் வாக்குறுதி அளித்த போது “நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்” என்றார்.

67. “என் மக்களே! ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்! பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும்” என்றார்.

68. அவர்களது தந்தை அவர்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்கள் நுழைந்த போது மனதில் நினைத்த ஒரு தேவையை யஃகூப் நிறைவேற்றிக் கொண்டார் என்பதைத் தவிர (பல வாசல்கள் வழியாக நுழைந்தது) அல்லாஹ்விடமிருந்து அவர்களைச் சிறிதளவும் காப்பாற்றவில்லை. நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்திருப்பதால் அவர் அறிவுடையவராக இருந்தார். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

69. அவர்கள் யூஸுஃபிடம் சென்ற போது அவர் தமது சகோதரரை (தனியாக) அரவணைத்து “நான் தான் உனது சகோதரன். அவர்கள் செய்தவற்றைப் பற்றிக் கவலைப்படாதே!” எனக் கூறினார்.

70. அவர்களை, அவர்களது சரக்குகளுடன் தயார்படுத்திய போது அளவுப் பாத்திரத்தைத் தமது சகோதரனின் சுமையில் வைத்தார். பின்னர் “ஒட்டகக் கூட்டத்தாரே! நீங்கள் திருடர்கள்” என்று அறிவிப்பாளர் அறிவித்தார்.

71. இவர்களை நோக்கி வந்த அவர்கள் “எதைத் தொலைத்து விட்டீர்கள்?” என்று கேட்டனர்.

72. “மன்னருக்குரிய அளவுப் பாத்திரத்தை நாங்கள் காணவில்லை. அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகச் சுமை(யளவு தானியம்) உண்டு. நான் அதற்குப் பொறுப்பாளன்” என்றனர்.

73. “நாங்கள் இப்பூமியில் குழப்பம் விளைவிக்க வரவில்லை. நாங்கள் திருடர்களும் அல்லர் என்பதை அல்லாஹ்வின் மீது ஆணையாக அறிவீர்கள்” என்று இவர்கள் கூறினர்.

74. “நீங்கள் பொய்யர்களாக இருந்தால் இதற்குரிய தண்டனை என்ன?” என்று அவர்கள் கேட்டனர்.

75. “யாருடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவரே (அவரைப் பிடித்துக் கொள்வதே) அதற்குரிய தண்டனை. நாங்கள் அநீதி இழைத்தோரை இவ்வாறே தண்டிப்போம்” என்று இவர்கள் கூறினர்.

76. அவரது சகோதரரின் சுமைக்கு முன் இவர்களின் சுமைகளை (யூசுஃப் சோதிக்க) ஆரம்பித்தார். பின்னர் அவரது சகோதரரின் சுமையிலிருந்து அதை வெளியே எடுத்தார். இவ்வாறே யூஸுஃபுக்கு தந்திரத்தைக் கொடுத்தோம்.236 அல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப் படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். நாம் நாடியோருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்.

77. “இவர் திருடியிருந்தால் இதற்கு முன் இவரது சகோதரரும் திருடியிருக்கிறார்” என்று அவர்கள் கூறினர். (அந்தச் சகோதரன் தானே என்ற விஷயத்தை) யூஸுஃப், அவர்களிடம் வெளிப்படுத்தாமல் தமது மனதுக்குள் வைத்துக் கொண்டார். “நீங்கள் மிகக் கெட்டவர்கள்; நீங்கள் கூறுவதை அல்லாஹ்வே நன்கு அறிவான்” என்றார்.

78. “அமைச்சரே! இவருக்கு வயது முதிர்ந்த தந்தை இருக்கிறார். எனவே அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரைப் பிடித்துக் கொள்வீராக! உம்மை நன்மை செய்பவராக நாங்கள் காண்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.

79. “எங்கள் பொருளை யாரிடம் எடுத்தோமோ அவரைத் தவிர மற்றவரைப் பிடித்துக் கொள்வதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம். அவ்வாறு செய்தால் நாங்கள் அநீதி இழைத்தவர்களாவோம்” என்று அவர் கூறினார்.

80. அவர் விஷயத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்த போது, தனியாக ஆலோசனை செய்தனர். “உங்கள் தந்தை அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் உறுதிமொழி எடுத்ததை நீங்கள் அறியவில்லையா? முன்னர் யூஸுஃப் விஷயத்திலும் வரம்பு மீறினீர்கள்! எனவே என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு தீர்ப்பளிக்கும் வரை இப்பூமியிலேயே தங்கப் போகிறேன். அவன் சிறந்த தீர்ப்பளிப்பவன்” என்று அவர்களில் மூத்தவர் கூறினார்.

81. உங்கள் தந்தையிடம் சென்று “எங்கள் தந்தையே! உமது மகன் திருடி விட்டான். அறிந்ததையே சாட்சி கூறுகிறோம். நாங்கள் மறைவானவற்றை அறிவோராக இல்லை” என்று கூறுங்கள்!

82. “நாங்கள் இருந்த ஊர் வாசிகளிடமும், எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தாரிடமும் விசாரியுங்கள்! நாங்கள் உண்மை கூறுபவர்களே” (என்று தந்தையிடம் கூறினார்கள்.)

83. “அப்படியல்ல! உங்கள் உள்ளங்கள் ஒரு காரியத்தைச் செய்யத் தூண்டி விட்டன. எனவே அழகிய பொறுமையைக் கடைப் பிடிக்கிறேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் சேர்க்கக் கூடும். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்” என்று அவர் (தந்தை) கூறினார்.

84. அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்! ” யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமே’ என்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார்.

85. “அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது இறக்கும் வரை நீர் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்)” என்று அவர்கள் கூறினர்.

86. “எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார்.

87. “என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்றாகத் தேடுங்கள்! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்” என்றார்.

88. அவர்கள் அவரிடம் (யூஸுஃபிடம்) வந்தனர். “அமைச்சரே! எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. அற்பமான சரக்குகளையே கொண்டு வந்திருக்கிறோம். எனவே எங்களுக்கு முழுமையாக உணவுப் பொருள் தருவீராக! எங்களுக்குத் தானமாகவும் தருவீராக! தானம் செய்வோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்” என்றனர்.

89. “நீங்கள் அறியாதிருந்த போது யூஸுஃபையும், அவரது சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை அறிவீர்களா?” என்று அவர் கேட்டார்.

90. “நீர் தாம் யூஸுஃபா?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர் “நான் தான் யூஸுஃப். இவர் எனது சகோதரர். அல்லாஹ் எங்களுக்கு அருள் புரிந்து விட்டான். யார் (இறைவனை) அஞ்சி பொறுமையைக் கடைப்பிடிக்கிறாரோ அத்தகைய நன்மை செய்வோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்” என்று அவர் கூறினார்.

91. “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் எங்களை விட உம்மைத் தேர்வு செய்து விட்டான். நாங்கள் தவறிழைத்து விட்டோம்” என்று அவர்கள் கூறினர்.

92. “இன்று உங்களைப் பழிவாங்குதல் இல்லை. உங்களை அல்லாஹ் மன்னிப்பான். அவன் கருணையாளர்களில் சிறந்த கருணையாளன்” என்று அவர் கூறினார்.

93. “எனது இந்தச் சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்! அவர் பார்வையுடையவராக ஆவார். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” (எனவும் கூறினார்)

94. “ஒட்டகக் கூட்டம் புறப்பட்ட போது “நான் யூஸுஃபுடைய வாசனையை உணர்கிறேன். நீங்கள் என்னைப் பழிக்காதிருக்க வேண்டுமே” என்று அவர்களின் தந்தை கூறினார்.

95. “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் உமது பழைய தவறான முடிவில் தான் இருக்கிறீர்” என்று (குடும்பத்தினர்) கூறினர்.

96. நற்செய்தி கூறுபவர் வந்து, அதை அவரது முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வை பெற்றவராக மாறினார். “நீங்கள் அறியாததை நான் அல்லாஹ் விடமிருந்து அறிகிறேன் என உங்களிடம் கூறவில்லையா?” என்று அவர் கூறினார்.

97. அதற்கவர்கள் “எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுங்கள்! நாங்கள் குற்றம் செய்து விட்டோம்” என்றனர்.

98. “உங்களுக்காக எனது இறைவனிடத்தில் பின்னர் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று அவர் கூறினார்.

99. அவர்கள் யூஸுஃபிடம் சென்ற போது, தமது தாய், தந்தையரை தம்முடன் அரவணைத்துக் கொண்டார். “அல்லாஹ் நாடினால் அச்சமற்று எகிப்து நகரில் நுழையுங்கள்!” என்றார்.

100. தமது பெற்றோரைச் சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்குப் பணிந்தனர். “என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவுக்கு விளக்கம் இதுவே. அதை என் இறைவன் உண்மையாக்கி விட்டான். சிறையிலிருந்து வெளிவரச் செய்த போது, அவன் எனக்குப் பேருதவி செய்தான். எனக்கும், என் சகோதரர்களுக்கும் இடையே ஷைத்தான் பிரிவினை ஏற்படுத்திய பின் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்து விட்டான். என் இறைவனோ நாடியதை நுணுக்கமாகச் செய்பவன்; அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்” என்று அவர் கூறினார்.

101. “என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய். (பல் வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!” (என்றும் கூறினார்)

102. (முஹம்மதே!) இவை, மறைவான செய்திகள். இதை உமக்கு அறிவிக்கிறோம். அவர்கள் அனைவரும் (யூஸுஃபுக்கு எதிராக) ஒருமனதாக சூழ்ச்சி செய்த போது அவர்களுடன் நீர் இருக்கவில்லை.

103. நீர் பேராசைப்பட்டாலும் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.

104. நீர் அவர்களிடம் இதற்காக எந்தக் கூலியும் கேட்கவில்லை. இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.

105. வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர்.

106. அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

107. சுற்றி வளைக்கும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வருவதைப் பற்றியோ, அவர்கள் அறியாத நிலையில் திடீரென அந்த நேரம்1 வந்து விடுவதைப் பற்றியோ அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?

108. “இதுவே எனது பாதை. நானும், என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம். அல்லாஹ் தூயவன். நான் இணை கற்பிப்பவன் அல்லன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

109. உமக்கு முன் (பல்வேறு ஊர்களுக்கு அந்தந்த) ஊர்களைச் சேர்ந்த ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். இவர்கள் பூமியில் பயணம் செய்து, இவர்களுக்கு முன் சென்றோரின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதைக் கவனிக்கவில்லையா? (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே மிகச் சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

110. முடிவில் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணிய போது நமது உதவி அவர்களிடம் வந்தது. நாம் நாடியோர் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும் நமது வேதனை நீக்கப்படாது.

111. அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக்கிக் கூறுகிறது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: