10 – யூனுஸ்

அத்தியாயம்: 10 யூனுஸ் – ஓர் இறைத் தூதரின் பெயர், மொத்த வசனங்கள்: 109

யூனுஸ் என்ற இறைத்தூதரைப் பற்றி பல்வேறு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்த அத்தியாயத்தில் 98வது வசனத்தில் யூனுஸ் நபியை ஏற்காத மக்கள், இறைவனுடைய தண்டனையின் அறிகுறியைப் பார்த்தவுடன் திருந்தி ஏக இறைவனை ஏற்றுக் கொண்டதால் அவர்கள் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள் என்ற செய்தி இடம் பெறுவதால் யூனுஸ் என்று பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்..

1. அலிஃப், லாம், ரா. இது ஞானம்மிக்க வேதத்தின் வசனங்கள்.

2. “மக்களை எச்சரிப்பீராக” என்றும், “நம்பிக்கை கொண்டோருக்கு தாம் செய்த நற்செயல் (அதற்கான கூலி) தம் இறைவனிடம் உண்டு என நற்செய்தி கூறுவீராக” என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? “இவர் தேர்ந்த சூனியக்காரர்” என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.

3. உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?

4. உங்கள் அனைவரின் மீளுதல் அவனிடமே உள்ளது. (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவனே ஆரம்பத்தில் படைத்தான். பின்னர், நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களுக்கு கூலியை நியாயமாக வழங்குவதற்காக மீண்டும் படைக்கிறான். (ஏக இறைவனை) மறுப்போருக்கு அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் கொதிக்கும் பானமும், துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

5. ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

6. இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்திருப்பதிலும் (இறைவனை) அஞ்சுகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.

7, 8. நமது சந்திப்பை நம்பாது, இவ்வுலக வாழ்வில் திருப்தியடைந்து அதிலேயே நிம்மதி அடைவோரும், நமது வசனங்களைப் புறக்கணிப்போரும், (தீமையை) செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களின் தங்குமிடம் நரகமாகும்.

9. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களை அவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும்.

10. “அல்லாஹ்வே! நீ தூயவன்”. என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனை. ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்து. “அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும்.

11. மனிதர்கள் நல்லவற்றுக்கு அவசரப்படுவது போல் அவர்கள் விஷயத்தில் தீங்கு செய்வதற்கு அல்லாஹ் அவசரப்பட்டிருந்தால் அவர்களின் காலக்கெடு அவர்களுக்கு முடிக்கப்பட்டிருக்கும். நமது சந்திப்பை நம்பாதவர்களை அவர்களது அத்துமீறலில் தடுமாற விட்டு விடுவோம்.

12. மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன.

13. உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.

14. அவர்களுக்குப் பின்னர் எவ்வாறு செயல்படவுள்ளீர்கள் என்பதைக் காண்பதற்காக உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கினோம்.

15. அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் “இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!” என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்துவிட்டால் மகத்தான நாளின்1 வேதனையை அஞ்சுகிறேன்” என (முஹம்மதே!) கூறுவீராக!

16. “அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

17. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? குற்றவாளிகள் வெற்றி பெற மாட்டார்கள்.

18. அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!

19. மனிதர்கள் ஒரே சமுதாயமாகவே இருந்தனர். பின்னர் முரண்பட்டனர். உமது இறைவனிடமிருந்து விதி முந்தியிராவிட்டால் அவர்கள் முரண்பட்ட விஷயத்தில் அவர்களிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்.

20. “இவரது இறைவனிடமிருந்து இவருக்குச் சான்று அருளப்பட்டிருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கேட்கி ன்றனர். “மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. நீங்களும் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

21. மனிதர்களுக்குத் துன்பம் ஏற்பட்ட பின் அருளை நாம் அவர்களுக்கு அனுபவிக்கச் செய்தால் நமது சான்றுகளில் அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். “அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன்” என கூறுவீராக! நமது தூதர்கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சியைப் பதிவு செய்கின்றனர்.

22. கடலிலும், தரையிலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத்தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி “இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

23. அவர்களை அவன் காப்பாற்றும் போது, நியாயமின்றி பூமியில் அட்டூழியம் செய்கின்றனர். மனிதர்களே! உங்கள் அட்டூழியம் உங்களுக்கே எதிரானது. இவ்வுலக வாழ்வில் சில வசதிகள் உண்டு. பின்னர் நம்மிடமே உங்கள் மீளுதல் உண்டு. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது உங்களுக்கு அறிவிப்போம்.

24. இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தி இருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கி விடுகிறோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

25. அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோரை நேரான பாதைக்கு வழி காட்டுகிறான்.

26. நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதை விட) அதிகமாகவும் உண்டு. அவர்களின் முகங்களில் இருளோ, இழிவோ ஏற்படாது. அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

27. தீமைகளைச் செய்தவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

28. அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில்1 இணை கற்பித்தவர்களை நோக்கி “நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!” என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். “நீங்கள் எங்களை வணங்கவே இல்லை” என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள்.

29. “எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்” என்றும் கூறுவார்கள்.

30. அங்கு தான் ஒவ்வொருவரும் தான் செய்த வினையைக் கண்டு கொள்வர். அவர்களின் உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்விடம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.

31. “வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?” என்று கேட்பீராக! “அல்லாஹ்” என்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா” என்று நீர் கேட்பீராக!

32. அவனே உங்களின் உண்மை இறைவனாகிய அல்லாஹ். உண்மைக்குப் பின்னே வழி கேட்டைத் தவிர வேறு என்ன உள்ளது? எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?

33. அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்’ என்ற உமது இறைவனின் வாக்கு குற்றம் புரிவோர் மீது இவ்வாறு உறுதியாகி விட்டது.

34. “உங்கள் தெய்வங்களில் முதலில் படைப்பவனும், மீண்டும் அதைப் படைப்பவனும் உள்ளனரா?” என்று கேட்பீராக! “அல்லாஹ்வே முதலில் படைக்கிறான். பின்னர் மறுபடியும் படைக்கிறான்! எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?” என்று கூறுவீராக!

35. “உங்கள் தெய்வங்களில் உண்மைக்கு வழி காட்டுபவர் உண்டா?” என்று கேட்பீராக! “அல்லாஹ்வே உண்மைக்கு வழி காட்டுகிறான்” என்று கூறுவீராக! உண்மைக்கு வழி காட்டுபவன் பின்பற்றத் தக்கவனா? பிறர் வழி நடத்தினால் தவிர தானாகச் செல்ல இயலாதவை பின்பற்றத் தக்கவையா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?

36. அவர்களில் அதிகமானோர் ஊகத்தைத் தவிர பின்பற்றுவதில்லை. ஊகம் ஒரு போதும் உண்மையை தேவையற்றதாக்காது. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

37. இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது.

38. “இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

39. அவர்களுக்கு முழுமையான அறிவு இல்லாததாலும், விளக்கம் கிடைக்காததாலும் பொய்யெனக் கருதுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். அநீதி இழைத்தோரின் முடிவு என்ன ஆனது என்பதைக் கவனிப்பீராக!

40. அவர்களில் இதை (குர்ஆனை) நம்புவோரும் உள்ளனர். இதை நம்பாதோரும் உள்ளனர். குழப்பம் செய்வோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.

41. (முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் “எனது செயல் எனக்கு! உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்பவற்றிலிருந்து நீங்கள் விலகியவர்கள். நீங்கள் செய்பவற்றிலிருந்து நான் விலகியவன்” என்று கூறுவீராக!

42. உமது கூற்றை காது கொடுத்துக் கேட்போரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் விளங்காத போதும் செவிடர்களை நீர் கேட்கச் செய்வீரா?

43. உம்மைப் பார்ப்போரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் பார்க்காத போதும் குருடனுக்கு நீர் வழி காட்டுவீரா?

44. அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதளவும் தீங்கு இழைக்க மாட்டான். மாறாக மனிதர்கள் தமக்கே தீங்கு இழைக்கின்றனர்.

45. அவர்களை அவன் எழுப்பும் நாளில் பகலில் சிறிது நேரமே (பூமியில்) வசித்தது போல் ஒருவரையொருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யெனக் கருதியோர் இழப்பு அடைந்து விட்டனர். அவர்கள் நேர் வழி பெறவில்லை.

46. (முஹம்மதே!) நாம் அவர்களுக்கு எச்சரித்ததில் சிலவற்றை உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ நம்மிடமே அவர்களின் மீளுதல் உள்ளது. பின்னர் அவர்கள் செய்வதற்கு அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கிறான்.

47. ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு தூதர் உள்ளார். அவர்களின் தூதர் வந்ததும், அவர்களிடையே நீதியாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

48. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்குறுதி எப்போது நிறை வேறும்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.

49. “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

50. “அவனது வேதனை இரவிலோ, பகலிலோ, உங்களிடம் வந்தால் (என்னவாகும்) என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! குற்றவாளிகள் எதற்கு அவசரப்படுகின்றனர்?” என்று கேட்பீராக!

51. அது நிகழ்ந்த பிறகு தான் அதை நம்புவீர்களா? “இப்போது தானா (நம்புவீர்கள்?) இதைத் தானே அவசரமாகத் தேடிக் கொண்டிருந்தீர்கள்?” (என்று கூறப்படும்.)

52. பின்னர் “நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்! நீங்கள் செய்ததற்காகவே தவிர தண்டிக்கப்படுவீர்களா? ” என்று அநீதி இழைத்தோருக்குக் கூறப்படும்.

53. “அது (மறுமை) உண்மை தானா?” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “ஆம்! என் இறைவன் மீது ஆணையாக! அது உண்மையே. நீங்கள் (அவனை) வெல்ல முடியாது” என்று கூறுவீராக!

54. அநீதி இழைத்த ஒவ்வொருவருக்கும் பூமியில் உள்ளவையாவும் சொந்தமாக இருந்தால் அதை ஈட்டுத் தொகையாக வழங்குவர். வேதனையைக் கண்டதும் உள்ளூரக் கவலைப்படுவார்கள். அவர்களுக்கிடையே நீதியாகத் தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

55. கவனத்தில் கொள்க! வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

56. அவனே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

57. மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன.

58. “அல்லாஹ்வின் அருளிலும், அன்பிலுமே அவர்கள் மகிழ்ச்சி யடையட்டும். அவர்கள் திரட்டுவதை விட இது சிறந்தது” என்று கூறுவீராக!

59. “அல்லாஹ் உங்களுக்கு உணவை இறக்கினான். அதில் தடுக்கப்பட்டதையும், அனுமதிக்கப்பட்டதையும் நீங்களாக ஏற்படுத்திக் கொண்டீர்கள்!” என்று கூறுவீராக! “அல்லாஹ்வே உங்களுக்கு அனுமதி யளித்தானா? அல்லது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுகிறீர்களா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” என்று கேட்பீராக.

60. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுவோர் கியாமத் நாளைப்1 பற்றி என்ன தான் நினைக்கின்றனர்? அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன். எனினும் அவர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை.

61. ஏதேனும் ஒரு காரியத்தில் நீர் இருந்தாலும், குர்ஆனிலிருந்து எதை யாவது நீர் கூறினாலும், (மனிதர்களே!) நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நீங்கள் ஈடுபடும் போது உங்களை நாம் கண்காணிக்காமல் இருப்பதில்லை. பூமியிலும், வானத்திலும் அணுவளவோ, அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ உமது இறைவனை விட்டும் மறையாது. (அவை) தெளிவான பதிவேட்டில் இல்லாமல் இருப்பதில்லை.

62. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

63. அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.

64. இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மாற்றுதல் என்பது இல்லை.155 அதுவே மகத்தான வெற்றி.

65. அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம்! கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவன் கேட்பவன்; அறிந்தவன்.

66. கவனத்தில் கொள்க! வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அல்லாஹ்வையன்றி தெய்வங்களை அழைப்போர் எதைப் பின்பற்றுகின்றனர்? அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் கற்பனை செய்வோராகவே உள்ளனர்.

67. இரவை நீங்கள் அமைதி பெறுவதற் காகவும், பகலை வெளிச்சமுடையதாகவும் அவனே அமைத்தான். செவிமடுக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.

68. “அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்” என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன்.10 அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?

69. “அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுவோர் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறுவீராக!

70. இவ்வுலக வாழ்வில் சில வசதிகள் உண்டு. அவர்களின் திரும்புதல் நம்மிடமே உள்ளது. அவர்கள் (நம்மை) மறுப்போராக இருந்ததால் அவர்களுக்குக் கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்வோம்.

71. நூஹுடைய வரலாறை அவர்களுக்குக் கூறுவீராக! “என் சமுதாயமே! நான் இருப்பதும், அல்லாஹ்வின் வசனங்கள் மூலம் நான் அறிவுரை கூறுவதும் உங்களுக்குப் பெரும் கஷ்டமாக இருந்தால், அல்லாஹ்வையே சார்ந்து விட்டேன். உங்கள் திட்டத்தையும், உங்கள் தெய்வங்களையும் திரட்டுங்கள்! பின்னர் உங்கள் திட்டம் உங்களுக்கு மறைமுகமாக இருக்க வேண்டாம். பின்னர் என் விஷயத்தில் தீர்ப்பளியுங்கள்! எனக்கு அவகாசம் தராதீர்கள்!” என்று தமது சமுதாயத்திடம் கூறியதை நினைவூட்டுவீராக!

72. நீங்கள் புறக்கணித்தால் (அது பற்றி எனக்குக் கவலையில்லை.) நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நான் முஸ்லிமாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்” (என்றும் கூறினார்.)

73. அவர்கள் அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். அவர்களை வழித்தோன்றல்களாக ஆக்கினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். “எச்சரிக்கை செய்யப்பட்டோரின் முடிவு என்ன ஆனது?’ என்பதைக் கவனிப்பீராக!

74. அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது இவ்வாறே முத்திரையிடுவோம்.

75. அவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் நமது சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் செய்த கூட்டமாக இருந்தனர்.

76. நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்த போது “இது தெளிவான சூனியம்” என்றனர்.

77. “உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.

78. “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும், இப்பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களிடம் வந்திருக்கிறீரா? நாங்கள் உங்கள் இருவரையும் நம்புவோர் அல்லர்” என்று அவர்கள் கூறினர்.

79. “திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

80. சூனியக்காரர்கள் வந்தவுடன் “போடுவதைப் போடுங்கள்!” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.

81. அவர்கள் போட்ட போது “நீங்கள் கொண்டு வந்திருப்பது சூனியமாகும். அல்லாஹ் அதை ஒழிப்பான். குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ் மேலோங்கச் செய்வதில்லை” என்று மூஸா கூறினார்.

82. குற்றவாளிகள் வெறுத்த போதும் அல்லாஹ் தனது கட்டளைகளைக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவான்.

83. ஃபிர்அவ்ன், தங்களைத் துன்புறுத்துவான் என அவனுக்கும், அவனது சபையோருக்கும் பயந்ததால் அவரது சமுதாயத்தில் சிறு பகுதியினரைத் தவிர மற்றவர்கள் மூஸாவை நம்பவில்லை. ஏனெனில் ஃபிர்அவ்ன் அப்பூமியில் வலிமையுள்ளவன்; வரம்பு மீறுபவன்.

84. “என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்!” என்று மூஸா கூறினார்.

85. “அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே!” என்று அவர்கள் கூறினர்.

86. “(உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து உனது அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாக!” (என்றும் கூறினர்)

87. “இருவரும், உங்கள் சமுதாயத்துக்காக எகிப்து நகரில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்! உங்கள் வீடுகளை ஒன்றையொன்று எதிர் நோக்கும் வகையில் ஆக்குங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!” என்று மூஸாவுக்கும் அவரது சகோதரருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம்.

88. “எங்கள் இறைவா! ஃபிர்அவ் னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையை விட்டும் அவர்களை வழி கெடுக்கவே (இது பயன்படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.

89. “உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது. இருவரும் உறுதியாக நில்லுங்கள்! அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்!” என்று (இறைவன்) கூறினான்.

90. இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது “இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்று கூறினான்.

91. இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய்.

92. உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.

93. இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். அறிவு அவர்களிடம் வரும் வரை அவர்கள் முரண்படவில்லை. உமது இறைவன் கியாமத் நாளில்1 அவர்கள் முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.

94. (முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மை உம்மிடம் வந்துள்ளது. சந்தேகிப்போரில் நீர் ஆகிவிடாதீர்!

95. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோரில் நீர் ஆகிவிடாதீர்! அவ்வாறு செய்தால் இழப்பை அடைந்தவராவீர்!

96, 97. யாருக்கு எதிராக அல்லாஹ்வின் கட்டளை உறுதியாகிவிட்டதோ அவர்கள் எந்தச் சான்று தம்மிடம் வந்த போதும், துன்புறுத்தும் வேதனையைக் காணும் வரை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

98. (கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள் இருக்கக் கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.

99. (முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?

100. அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் நம்பிக்கை கொள்ள முடியாது. இதை விளங்காதோருக்கு வேதனையை அவன் அளிப்பான்.

101. “வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்!” என்று கூறுவீராக! நம்பிக்கை கொள்ளாத கூட்டத்துக்கு சான்றுகளும், எச்சரிக்கைகளும் பயனளிக்காது.

102. “அவர்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்ட துன்பங்கள் போன்றதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? எதிர் பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறுவீராக!

103. பின்னர் நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். நம்பிக்கை கொண்டோரை இவ்வாறு காப்பாற்றுவது நமது கடமை.

104. “மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால் (எனக்குக் கவலையில்லை.) அல்லாஹ்வை யன்றி நீங்கள் வணங்குவோரை வணங்க மாட்டேன். மாறாக உங்களைக் கைப்பற்ற வுள்ள அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கை கொண்டவனாக இருக்கக் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக!

105. உண்மை வழியில் நின்று இம் மார்க்கத்தை நோக்கி உமது கவனத்தைத் திருப்புவீராக! இணை கற்பிப்பவராக ஆகி விடாதீர்!

106. அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

107. அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

108. “மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர் வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

109. (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: